×

முக்கிய நிகழ்ச்சிகளுக்கு எப்போதும் அனுமதி மறுப்பதில்லை: உயர் நீதிமன்றத்தில் காவல்துறை தகவல்

சென்னை: சேலம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஆர்எஸ்எஸ் சார்பில் பேரணி நடத்த அனுமதி கோரி தொடரப்பட்ட வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆர்எஸ்எஸ் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜி.கார்த்திகேயன், ஆர்எஸ்எஸ் பேரணிக்கு கடந்த மாதம் அளித்த மனுவை பரிசீலிக்காமல், கடைசி நேரத்தில் அந்த மனுவை நிராகரித்துள்ளதாகவும், ஒவ்வொரு முறையும் போலீசார் இதே பாணியை கையாளுவதாகவும் தெரிவித்தார். அரசு தரப்பில் இதுதொடர்பாக பதிலளிக்க அவகாசம் கோரப்பட்டதையடுத்து, இந்த வழக்கு விசாரணையை நீதிபதி வரும் 11ம் தேதிக்கு தள்ளி வைத்தார். அப்போது நீதிபதி, இதுபோன்ற விவகாரங்களில் நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்காமல் கட்டுப்பாடுகளை விதித்தும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் உரிய உத்தரவாதம் பெற்றுக்கொண்டும் அனுமதி அளிக்கலாம்.

சமீபத்தில் சென்னையில் நடந்த ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி குளறுபடி மற்றும் லியோ பட டிரெய்லர் வெளியீட்டில் திரையரங்கு சேதப்படுத்தப்பட்டது போன்ற நிகழ்வுகளுக்கு போலீசாரின் தவறான கையாளுதலே காரணம் என்றார். நீதிபதியின் இந்த கருத்துக்கு விளக்கமளிக்கும் வகையில் பிற்பகலில் ஆஜரான மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சிக்கு அதிகப்படியான எண்ணிக்கையில் போலி டிக்கெட்டுகளை அச்சிட்டு கொடுத்துள்ளளனர். அதனால் தான் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனது. அதேபோல லியோ பட டிரெய்லர் வெளியீட்டு விழாவை தியேட்டருக்கு வெளியே நடத்தியுள்ளனர். இதற்காக தியேட்டர் நிர்வாகம் காவல் துறையிடம் எந்த அனுமதியும் கோரவில்லை. தமிழக காவல்துறையை பொறுத்தமட்டில் முக்கியமாக நடைபெறும் எந்த நிகழ்வுக்கும் அனுமதி மறுப்பதில்லை என்றார்.

The post முக்கிய நிகழ்ச்சிகளுக்கு எப்போதும் அனுமதி மறுப்பதில்லை: உயர் நீதிமன்றத்தில் காவல்துறை தகவல் appeared first on Dinakaran.

Tags : High Court ,Chennai ,Justice ,G. Jayachandran ,RSS ,Salem ,Krishnagiri ,Dinakaran ,
× RELATED குற்ற வழக்கு நிலுவையில் இருந்தால்,...